bsnleu

bsnleu

welcome

welcome

Sunday, 14 May 2017

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் நிர்வாகக் கெடுபிடிகளை மட்டுமல்ல மத வேலிகளையும் தகர்த்த தோழர்.சௌந்தரராஜன்...


1968ம் ஆண்டு தபால் தந்தி ஊழியர்களுடைய அகில இந்திய போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தினை சட்ட விரோதமெனக் கூறி தடை செய்த அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு அத்துடன் நில்லாமல் அந்தப் போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்குவதற்கும் முற்பட்டது. அகில இந்திய அளவில் செயல்பட்ட சங்கத் தலைவர்கள் பலரும் பலவகைகளில் பழிவாங்கப்பட்டனர். வீரம் செறிந்த அந்தப் போராட்டத்தைத் தமிழகத்தில் முன்னின்று நடத்தியவர் சௌந்தரராஜன்.

வர்க்க உணர்வோடு தொழிற்சங்க இயக்கத்தில் முன்னின்று, பின்னர் கட்சி உறுப்பினராகவும் பரிணமித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயலாற்றிக் கொண்டிருக்கிற தோழர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், மதுரையைச் சேர்ந்த தோழர் ஆர். சௌந்தரராஜன்.
சக தோழர்களால் “சௌந்தர்” என்று அன்போடு அழைக்கப்படும் சௌந்தரராஜனின் இயக்க ஈடுபாட்டிற்கு, தொழிற்சங்கப் பணிகளும் அரசியல் புரிதல்களும் எந்த அளவுக்குப் பங்களித்தனவோ அதே அளவுக்கு, அவருடைய தந்தையாரின் அர்ப்பணிப்பும் முக்கியக் காரணமாக அமைந்தது.
தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் 1940ம் ஆண்டுகளிலேயே பல மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் தொடங்கப்பட்டன. 1940ம் ஆண்டு மதுரையில் முதல் கட்சிக் கிளை உருவானது. அடுத்தடுத்து மதுரை மாநகரில் தொழிற்சங்கமும். மாணவர் சங்கமும் தொடங்கப்பட்டன. கிராமப் பகுகளில் விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் ரயில்வேயிலும், பஞ்சாலைகளிலும் தொழிற்சங்கங்களில் இணைந்த தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினரானார்கள்.
இவ்வாறு தொழிற்சங்கத்தின் வழியாக கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானவர்களில் ஒருவர் தோழர் ராக்கையா. ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் முனைப்போடு செயல்பட்ட அவரை நிர்வாகம் வேலையிலிருந்து நீக்கியது. அவர் அதற்குப் பிறகு ஒரு பஞ்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கேயும் தொழிலாளர்களுக்கான பல போராட்டங்களில் முன்னணியில் நின்றதற்காக ஆலை நிர்வாகம் அவரைப் பழிவாங்கி வெளியேற்றியது.
1947க்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் காவல்துறையினர் ராக்கையாவின் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கிக் கைது செய்தபோது, ராக்கையா காவல்துறையின் தாக்குதல் நடவடிக்கையைத் துணிந்து எதிர்த்து நின்றார். தகவலறிந்து திரண்ட அப்பகுதி மக்கள் ராக்கையாவுற்கு ஆதரவாக நின்றனர்.
தோழர் ராக்கையா ரயில்வேயில் பணிபுரிந்த போது - தூய்மையான வெள்ளை வேட்டி, சட்டையோடு காலில் செருப்பும், குடையும் பிடித்துச் செல்வார். அதைக் கண்ட மற்றைய சாதியினர் ஆத்திரமடைந்தார்கள். தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த ஒரு நபர் இப்படி வருவதா என்பதே அவர்களது ஆத்திரத்திற்குக் காரணம். அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடமும், போலீசிடமும் - தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த ஒரு ஆள் எப்படி மற்றவர்களுக்கு சமதையாக உடையணிந்து, காலில் செருப்போடு வரலாம் என்று கேட்டு புகார் செய்தார்கள். தொழிலாளர்களின் வேலை நிலைமை, ஊதியம், இதர உரிமைகள் ஆகியவற்றுக்காக மட்டுமல்லாமல் அவர்களது சமூக சமத்துவத்துக்காகவும் என்றென்றும் போராடுகிற கம்யூனிஸ்ட் கட்சி அந்த இயல்புப்படி சாதி வேறுபாட்டை எதிர்த்து ராக்கையாவுக்கு ஆதரவாக நின்றது. கட்சியிலும், சங்கத்திலும் பல பொறுப்புகளில் செயல்பட்டு ஒரு போராளியாகத் திகழ்ந்த தோழர் ராக்கையா 1980ல் காலமானார்.
ராக்கையா - மாறனாத்தாள் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சௌந்தரராஜன் எஸ்எஸ்எல்சி வரை படித்தார். சிறுவயதில் தன்னுடைய தந்தையின் போராட்ட ஈடுபாடுகளைப் பார்த்து உற்சாகமடைந்த சௌந்தர் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளானார்.
இளவயதில் பல வேலைகளுக்கும் சென்றவர், இறுதியாக தபால் தந்தித் துறையில் பணியில் சேர்ந்தார். தந்தையின் வழியில் தன்னையும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபடுத்திக்கொண்டார்.
தபால் தந்தி துறையில் ஓம்பிரகாஷ் குப்தா என்கிற அகில இந்திய ஊழியர் சங்கத் தலைவர், அந்நாள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான டாங்கே தலைமையை தீவிரமாக ஆதரித்தவர். தொழிலாளிகளுக்காகப் போராடுவதில் குப்தா தலைமை மேற்கொண்ட, நிர்வாகத்துடனான சமரசப் போக்கினைத் தீவிரமாக எதிர்த்து வந்தது கே.ஜி. போஸ் அணி. அந்த போஸ் அணியில், தமிழகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் தோழர் சௌந்தர்.
ஒரே சங்கமாக இருந்த என்எப்பிடிஇ அமைப்பில் தோழர்கள் பஞ்சாபகேசன், ராமச்சந்திரன், சந்திரசேகர், ராமசாமி, வீராச்சாமி இவர்களோடு இணைந்து நின்று, தொழிற்சங்க இயக்கத்தின் போராட்டக் குணத்தைக் கைவிடும் திருத்தல்வாதப் போக்கினை மறுத்து, எதிர் அணியை உருவாக்கியதிலும் அதைக் கட்டி வளர்த்ததிலும் தோழர் சௌந்தரராஜனுக்கு முக்கியப் பங்கு உண்டு.
1968ம் ஆண்டு தபால் தந்தி ஊழியர்களுடைய அகில இந்திய போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தினை சட்ட விரோதமென அறிவித்துத் தடை செய்தது அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு. அத்துடன் நில்லாமல் அந்தப் போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்குவதற்கும் அரசு முற்பட்டது. அகில இந்திய அளவில் செயல்பட்ட சங்கத் தலைவர்கள் பலரும் பலவகைகளில் பழிவாங்கப்பட்டனர். வீரம் செறிந்த அந்தப் போராட்டத்தைத் தமிழகத்தில் முன்னின்று நடத்தியவர் சௌந்தரராஜன்.
தொலைபேசித் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே, தாம் வசித்துவந்த வட்டாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்டவர் சௌந்தரராஜன். மதுரை, திண்டுக்கல் நகரங்களில் பணியாற்றிய நாட்களில் தோழர் பி. ராமமூர்த்தி. ஏ. பாலசுப்ரமணியம், என். சங்கரய்யா, கே.பி. ஜானகியம்மாள், வி.பி. சிந்தன், எஸ்.ஏ. தங்கராஜ் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றிய கூட்டங்களுக்குச் சென்றதையும், அவர்களோடு பல நேரங்களில் கலந்துரையாட கிடைத்த வாய்ப்பையும் இன்றும் பெருமையாகக் கருதுகிறார்.
ஒரு கம்யூனிஸ்ட் என்ற அடிப்படையில் தோழர் சௌந்தரராஜன் தன்னுடைய குடும்பத்தை அணுகிய முறையும் குறிப்பிடத்தக்கது. மத வேலிகளைத் தாண்டியது அவருடைய திருமணம். அவரோடு துறையில் ஒரு ஊழியராகப் பணியாற்றியதோடு, பல பேராட்டங்களிலும் கலந்து கொண்டவர் எமிலி ரோஸ். இந்து, கிறிஸ்துவ மத மாறுபாடுகளைக் கடந்து வளர்ந்த நேசத்தோடு இவர்களது திருமண வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.
இவர்களுடைய மகன் மதுசூதனன் கூட காதல் திருமணம் செய்து கொண்டவர்தான். மதுசூதனன், அவரோடு கல்லூரியில் பணியாற்றியவரான, இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த வாலண்டினா குரைசி இருவரும் காதலித்தார்கள். மகிழ்ச்சியோடு அவர்களுடைய காதலுக்கு ஆதரவளித்து மத மறுப்புத் திருமணம் செய்து வைத்தார் சௌந்தரராஜன். மனைவி ரோஸ் எதிர்பாராத வகையில் காலமானதைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியரான பிச்சையம்மாளைத் திருமணம் செய்து கொண்டார் சௌந்தரராஜன்.
சௌந்தரராஜனுக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். மகள்கள் வாலண்டினா, அருணா, அஜிதா, மைதிலி. மகன்கள் மதுசூதனன், சுதர்சனன். மற்றொரு மருமகள் மைதிலி. சௌந்தரின் குடும்பமே கட்சிக் குடும்பம் எனலாம். குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே கட்சி உறுப்பினர்களாகவோ, ஆதரவாளர்களாகவோ உள்ளவர்கள்தான்.
தோழர் சௌந்தரராஜன் 1995ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். துறை சார்ந்த வேலைக்குத்தான் ஓய்வு. இயக்கம் சார்ந்த பணிக்கு அல்லவே!
சில ஆண்டுகள் கட்சியின் நாளிதழான தீக்கதிர் ஆசிரியர் குழு பணியில் ஈடுபட்டார். பின்னர் தாம் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
79 வயதாகும் தோழர் சௌந்தர் அண்மைக் காலமாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கட்சித் தோழர்களோடு அவரது இல்லத்திற்குச் சென்று அவரை நான் சந்தித்தபோது அவரால் கோர்வையாகப் பேச முடியவில்லை. ஆயினும், கட்சி மீது அவருக்கு இருக்கிற தடுமாற்றமில்லாத உறுதிப்பாட்டை அவரது தடுமாறும் வார்த்தைகளிலிருந்து புரிந்துகொண்டு நெகிழ்ந்தேன். முன் போல் தன்னால் ஓடியலைந்து இயக்கப் பணிகளைச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தமே அவரை மிகுதியும் வாட்டுகிறது.
தொலைபேசித் துறையில் பணியில் இருந்த நாட்களிலும், பணி ஓய்வு பெற்ற பிறகும் தோழர் சௌந்தரராஜன் ஆற்றி வரும் பாராட்டுக்குரியது. பின்பற்றத்தக்கது.

No comments:

Post a Comment