மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் அரசு மருத்துவர்கள் கடந்த 15 நாட்களாக பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சி முறையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் பலூனில் தங்களது கோரிக்கைகளை எழுதி ஆகாயத்தில் பறக்கவிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சையை புதன்கிழமை முதல் நிறுத்தி உள்ளோம். இதனால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. அதேநேரத்தில், அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சைகள் எப்போதும் போல் நடைபெறும். நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 15 நாட்களாக நடைபெற்று வரும் மருத்துவர்களின் போராட்டத்தால் பெரியளவில் நோயாளிகளுக்கு பாதிப்பில்லை என்றாலும், மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆளும் கட்சிக்குள் இருக்கும் குழு மோதலால் அரசு நிர்வாகம் செயலற்றுக் கிடக்கிறது. இந்நிலையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அனைத்து மருத்துவப் பணிகளும் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக மருத்துவ சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற விரைந்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மருத்துவப் பணிகள் மேலும் மேலும் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உருவாகும்.
No comments:
Post a Comment