வறட்சியாலும்,கடன் சுமையாலும் தவிக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 21 மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஏப்ரல் 25 பொது வேலைநிறுத்தம், கடையடைப்பு நடத்துவது என அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.போராடும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவான போராட்டத்திற்கு திட்டமிடுவதற்காக மத்திய தொழிற்சங்கங்களது நிர்வாகிகளின் கூட்டம் ஏப்ரல் 17 திங்களன்று சென்னை எழும்பூர் எச்எம்எஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கி.நடராஜன் (தொமுச), க.அ.ராஜா ஸ்ரீதர் (எச்எம்எஸ்), அ.சவுந்தரராசன்( சிஐடியு), எம்.ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), இரா.ஜவகர் (ஏஐசிசிடியு), வி.சிவக்குமார் (ஏஐயுடியுசி), இரா.சம்பத் (டபிள்யுபிடியுசி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுகிறது. விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இடு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. வாங்கிய கடன் கழுத்தை நெரிக்கிறது. இவற்றைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்தும் நூற்றுக் கணக்கான விவசாயிகள் செத்துக் கொண்டே இருக்கிறார்கள்.விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க முன்வராமல், அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண முயலாமல் இருப்பது மத்திய அரசு தவறான பாதையில் பயணம் செய்வதையே காட்டுகிறது என்றும், இதனை விவசாயிகளுக்கான தேசியக் கொள்கை 2017 இன் தோல்வியாக எடுத்துக் கொண்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவேயில்லை. போராடும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்கக்கூட பிரதமர் தயாரில்லை. தமிழக அரசோ இயற்கையாக மரணமடைந்தால் நிவாரணத் தொகை அதிகரிப்பதாக அறிவித்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது.வறட்சி நிவாரணம், வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற கைவினைஞர்கள் வாழ்நிலை அதல பாதாளத்தில் உள்ளது.மொத்தத்தில் கிராமப்புற மக்கள் வாழ வழியற்று உள்ளனர்.எனவே, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; பொருத்தமான வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைத்திட வேண்டும்; விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி, தொடர்ச்சியாக வேலையும், ஊதியமும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுதும் ஏப்ரல் 25 அன்று பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.
இதில் தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்று வெற்றிபெறச் செய்யவேண்டும்.அன்றைய தினம் மாவட்டத் தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவதென்றும் ,சென்னையில் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் நடத்தவும், தென்சென்னை, வடசென்னை மாவட்டங்கள் இதில் பங்கேற்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும்,பொதுவேலை நிறுத்தம், கடை அடைப்பை விளக்கியும் ஏப்ரல் 21அன்று மாவட்டத் தலைநகர்களில்,தொழில் மையங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.இப்போராட்டங்களை வெற்றிகரமாக நடத்த மாவட்டக் குழுக்கள் கூடித் திட்டமிட்டு செயல்பட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment