bsnleu

bsnleu

welcome

welcome

Thursday 6 April 2017

இன்று தோழர் பி.டி.ரணதிவே நினைவு நாள் (1904-1990)

தங்க மெடலுடன் கட்சி ஊழியரான போராளி
பி. டி. ஆர். என்றும் பி.டி. ரணதிவே என்றும் அழைக்கப்பட்ட பாலச்சந்திர திரியம்பக் ரணதிவே பம்பாயில் சாதி,மத, பேதங்களை கடந்த சமூக சீர்திருத்தக் குடும்பத்தில் 1904ஆம்ஆண்டில் டிசம்பர் மாதத்தில் பிறந்தார். பள்ளியில் படிக்கும்பொழுதே தனது குடும்பத்தினர் அன்றாடச் செலவுகளுக்காக தனக்கு தரும் காசுகளை சேர்த்து வைத்து தன்னுடன் படித்தசக தலித் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கும், எழுதுபொருள் வாங்குவதற்கும் செலவிட்டார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் முதுகலையில் பொருளாதாரப் படிப்பில் அந்த மாகாணத்திலேயே முதல் மாணவராக விளங்கி தங்க மெடல் பரிசு பெற்றார். அவரது படிப்பிற்கும் திறமைக்கும் பொருளாதாரப் பேராசிரியராகவோ அல்லது அரசாங்கத்தின் உயர் பதவியிலோ அமர்ந்திருக்க முடியும். ஆனால் அவற்றையெல்லாம் உதறித்தள்ளி கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக ஆனார். ஆங்கிலேய அரசாங்கம் இந்து- முஸ்லிம் கலவரங்களை தூண்டிவிடுவதை கண்டித்து ரயில்வே தொழிலாளர் பத்திரிகையில் கட்டுரை எழுதினார். அதற்காக அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.1934ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பஞ்சாலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம் துவங்கியது. இதையொட்டி ரணதிவேயும், பல தோழர்களும் கைது செய்யப்பட்டனர். அவர் சிறையில் இருக்கும்பொழுது அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இன்றைய பாகிஸ்தானில்உள்ள ஹைதராபாத் (சிந்து) சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். 1946ஆம் ஆண்டில் இந்திய கடற்படை வீரர்கள் பெரும் எழுச்சியில் இறங்கினர். ரணதிவே அந்த வீரர்களுக்கு பம்பாய் தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவை திரட்டுவதற்கு பெரிதும் பாடுபட்டார். பிப்ரவரி 22ஆம் தேதியன்று பம்பாயில் 35 லட்சம் தொழிலாளிகள் பெரும் வேலை நிறுத்தம் செய்தனர். இதற்கு ஏற்பாடு செய்வதில் ரணதிவே முன்னின்றார்.1955ஆம் ஆண்டில் கட்சியின் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ரணதிவே, சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்திற்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தார். அந்த இயக்கமானது மொழி வழி அடிப்படையில் மகாராஷ்டிரம் பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையையும் கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் வெற்றி பெற்று தனி மகாராஷ்டிர மாநிலம் பிறந்தது.1962ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில்இந்திய-சீன எல்லை மோதல் ஏற்பட்டது. இச்சமயத்தில் ரணதிவேநவ்கால்என்ற பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்தார். போர் தீர்வல்ல; பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவரும் அவர் துணைவியார் விமலா ரணதிவேயும், ரணதிவேயின் சகோதரி அகல்யா ரங்கனேகரும், அவருடைய கணவர் பி.பி. ரங்கனேகரும் கட்சியின் முக்கியத் தலைவரான எஸ்.வி. பருலேக்கரும் அவருடைய துணைவியார் கோதாவரி பருலேக்கரும் கைதுசெய்யப்பட்டு பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் எஸ்.வி. பருலேக்கர் சிறையிலேயே மரணமடைந்தார். ரணதிவே நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1966ஆம் ஆண்டில்தான் விடுதலையானார்.அவர் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மிகுந்த அக்கறை காட்டினார். 1988ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதியன்று கொல்கத்தாவில் அவர் விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களின் மாநாட்டில்சமூக வளர்ச்சி என்ற வடிவத்தில் விஞ்ஞானத்தின் பங்குஎன்ற தலைப்பில் பேசும் போது முக்கியமான ஒன்றை குறிப்பிட்டார். அது இன்றைக்கும் பொருந்தும். ‘முன்பு விஞ்ஞானம் என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது. ஆனால் தற்போது விஞ்ஞானம் என்பதுவே ஒரு உற்பத்திச் சக்தியாகிவிட்டதுஎன்றார்.ஏகாதிபத்தியவாதிகளின் அதிகரித்து வரும் நிர்ப்பந்தத்தின் காரணமாக பொதுத்துறையை நிர்மூலமாக்குவது, உள்நாட்டு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது போன்றவை முதலாளித்துவப் பாதையின் தோல்வியையே படிப்படியாக வெளிப்படுத்துகிறதுஎன்று குறிப்பிட்டார்.ரணதிவே, வகுப்புவாத மற்றும் சீர்குலைவு சக்திகளுக்கெதிராக மீண்டும் மீண்டும் எச்சரித்து, உருவாகி வரும் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதில் தொழிற்சங்க இயக்கத்தின் பலவீனத்தை சுட்டிக் காண்பித்தார்."வகுப்புவாத சக்திகள் விஷக்கிருமிகளைப் போல நாட்டில் பரவி வரும் பொழுது நமது தொழிற்சங்கங்கள் அவற்றின் பொருளாதார கோரிக்கைகள் மீது தீரமிக்க போராட்டங்களை நடத்துவதில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.மற்றும் சிவசேனை, வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் பொருட்டு தொழிற்சங்கங்களில் நுழைகின்றனர்..." என்று சுட்டிக்காட்டினார்.பிடிஆர் ஒரு திறமை வாய்ந்த சிந்தனையாளர், ஒரு பண்பட்ட அறிஞர். அவர் அழிவற்ற மார்க்சியத் தத்துவத்தை இடைவிடாது காத்த போராளியாக ஒரு தீவிரமான நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். மக்கள் சேவையில் அவர் தன்னைமுழுக்க முழுக்க ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுப் பொன்னேடுகளில் பிடிஆரின் பெயர் என்றென்றும் அழிவற்று நிலவும்.

No comments:

Post a Comment