விஜய் மல்லையா மீதான வழக்கை, மத்திய அரசு தவிர்க்கப் பார்க்கிறதா? என்று உச்ச நீதிமன்றம் தீடீர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது.
‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ என்ற பிரபல சாராய ஆலை முதலாளியான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியிருந்தார். இந்த கடனைக் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்த அவர், ஒருகட்டத்தில் இங்கிலாந்துக்கு தப்பியோடி விட்டார்.
அவரை நேரில் ஆஜராகச் சொல்லி, உச்ச நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. நாட்டின் பல்வேறு நீதிமன்றங்கள் மல்லையாவுக்கு பிடிவாரண்டுகளையும் பிறப்பித்தன. ஆனால், மல்லையாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. மோடி அரசும் மல்லையாவை இந்தியா கொண்டுவர முயற்சிகள் எடுக்கவில்லை.
மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு செல்ல அனுமதி கோருபவர்கள், அதற்கான ஆதாரங்களை தருவதில் ஏன் தயங்குகிறார்கள் என்று அண்மையில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றமும் இந்திய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தது. அதன்பிறகே கடந்த சில நாட்களுக்கு ஆவணங்களை மோடி அரசு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், விஜய் மல்லையா மீதான வங்கி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சொலிசிட்டர் ஜெனரலை அழைத்து, வழக்கில் ஆஜராகாதது குறித்து விளக்கம் கேட்டனர். விஜய் மல்லையா மீதான வழக்கை மத்திய அரசு தவிர்க்கப் பார்க்கிறதா? என்றும் அவர்கள் கடுமையான கேள்வியை எழுப்பினர்.
அத்துடன் விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் வெள்ளிக்கிழமையன்று தண்டனை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment