bsnleu

bsnleu

welcome

welcome

Thursday, 10 August 2017

பழனியில் 9-8-17 எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! பழனியில் நமது BSNLEU சார்பில் கடந்த 04/08/2017 அன்று நடைபெற்ற அவசரபொதுக்குழுவில் எடுக்கப்பட்ட போராட்டத்திட்டம். தோழர் பழனிக்குமார் மாநில அமைப்பு செயலர் மற்றும் தோழர் அன்பழகன் கிளைச்செயலர் ஆகியோருக்கு கொலைமிரட்டல் விடுத்த சமூகவிரோதிகள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தலமட்ட அதிகாரிகளின் பாரபட்சப்போக்கை கண்டித்தும் வகுக்கப்பட்ட போராட்டத்திட்டப்படி  09/08/2017 அன்று  மாலை 5.30 மணியளவில் தொலைபேசி நிலையம் முன்பாக பழனி வட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆதரவோடு மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலசங்க , மாவட்டச்சங்க நிர்வாகிகளும், மற்றும் பல கிளைசெயலர்களும், பழனிவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தோழர்களும், மற்றும் BSNLEU முன்னணி ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்....
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பழனி  கிளைத் தலைவர் தோழர். சாது சிலுவைமணி தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர். அன்பழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். பழனிக்குமார் எழுச்சி மிகு  கோஷம்  எழுப்பியதோடு போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கினார். அதன் பின், CITU, BEFI, AIIEA, மற்றும் பழனி நகர தொழிற் சங்கத்தின் பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். 
அதற்கடுத்து BSNLEU சார்பாக மாவட்டத்தலைவர் பிச்சைக்கண்ணு, முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். எஸ். சூரியன், மாவட்டச் செயலர் சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கிளைப்பொருளர் தோழர். செந்தில்கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். BSNL நிர்வாகம் அத்து மீறியவர்கள் மீது மேலும் தாமதிக்காமல், உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ... எதிர் வரும் 23-08-17 அன்று அடுத்த கட்ட போராட்டம் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும்.

நமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் அறிக்கை...


நவம்பர் 9 - 11 தேதிகளில் தில்லியில் மாபெரும் தர்ணா மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல்...

புதுதில்லி, ஆக.9-சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.
வரும் நவம்பர் 9 – 11 தேதிகளில் தலைநகர் புதுதில்லியில் கோரிக்கைகளை வலி யுறுத்தி மாபெரும் மூன்று நாட்கள் தர்ணா போராட்டத்தை நடத்திடவும், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நோக்கி முன்னேறவும் செவ்வாய்க்கிழமையன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத்து மத்திய சங்கங்களும், தேசிய சம்மேளனங்களும், மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள்,வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள், இன்சூரன்ஸ் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள், பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள், ‘ஆஷா’ ஊழியர்கள் என அனைத்துத்தரப்பு தொழிலாளர்களும், ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மாபெரும் சிறப்பு மாநாடு, செவ்வாய்க்கிழமையன்று புதுதில்லியில் உள்ள தல்கொட்ரா அரங்கத்தில் நடைபெற்றது.இச்சிறப்பு மாநாட்டினை டாக்டர் ஹேமலதா(சிஐடியு), ராமேந்திர குமார் (ஏஐடியுசி). அசோக்சிங் (ஐஎன்டியுசி), சுப்புராமன் (தொமுச)முதலானவர்களைத் தலைமைக்குழுவாகக் கொண்டு காலை 11 மணியளவில் தல்கொட்ராஅரங்கில் தொடங்கியது. சிஐடியு சார்பில் தபன்சென், ஏஐடியுசி சார்பில் அமர்ஜித் கவுர், ஐஎன்டியுசி சார்பில் டாக்டர் சஞ்சீவ ரெட்டி, தொமுச சார்பில் சண்முகம் முதலானோர் மாநாட்டின் பிரகடனத்தை விளக்கி உரையாற்றினார்கள்.
மாநாட்டுப் பிரகடனம்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம்வருமாறு: “நாட்டில் மிகவும் தொன்மைவாய்ந்த தொழிற்சங்கமான ஐஎன்டியுசி சங்கம், அரசின்முத்தரப்பு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை களில் பங்கேற்க முடியாது என்கிற முறையில் மத்திய பாஜக அரசு எதேச்சதிகாரமான முறையில் முடிவெடுத்திருப்பதை இச்சிறப்பு மாநாடு கடுமையான வார்த்தைகளில் ஒருமனதாகக் கண்டிக்கிறது.மத்திய அரசு தன்னுடைய தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத பாதையில் தொடர்ந்துசென்று கொண்டிருக்கிறது. 2015 செப்டம்பர் 2 மற்றும் 2016 செப்டம்பர் 2 வேலை நிறுத்தங்ங்களில் நாட்டில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும், ஊழியர்களும் பங்கேற்ற போதிலும், ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்கள்மீதான தாக்குதல்களைக் குறைத்திடவே இல்லை. மாறாக மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் அடக்குமுறை மற்றும் ஊழியர் விரோதக் கொள்கை களின் காரணமாக அமைப்புரீதியாக பணி யாற்றும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, முறை சாராத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எரிகிற தீயில்...
வேலைவாய்ப்பின்மை என்பது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. பல தொழிற்பிரிவுகளில் வேலை இழப்புகள்ஏற்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.பொதுப் போக்குவரத்து, மின்சாரம்,மருந்துகளின் விலைகள் அதிகரித்திருப்ப துடன் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருப்பதன் காரணமாக சாமானிய மக்களின் வாழ்நிலைமை மிகவும்மோசம் அடைந்திருக்கிறது.
இந்தப்பின்னணி யில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலாகி இருக்கிறது. சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான அரசின் ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட்டிருப்பதால், முறைசாராத் தொழில்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இந்தியத் தொழிலாளர் மாநாடுகளும், உச்சநீதிமன்றமும் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே ஒப்பந்த ஊழியர்களுக்கும், சம வேலைக்கு சம ஊதியம்அளித்திட வேண்டும் என்று ஆணை பிறப்பித் துள்ள போதிலும் அதனை செவிமடுக்க மோடிஅரசு மறுத்து வருகிறது.
தாரைவார்த்திட துடிப்பு...
இவைமட்டுமல்லாமல் நாட்டின் பொரு ளாதாரத்திற்கு ஆணிவேராகத் திகழும் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, ஏர் இந்தியா,வங்கிகள், பாதுகாப்புத்துறை, பொதுப் போக்குவரத்து, எண்ணெய், மின்சாரம் போன்ற அனைத்துத்துறைகளையும் தனியாரிடம் விற்பதற்கு மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் இவை அனைத்துக்கும் உடமையாளர்கள் இந்த நாட்டுமக்கள். இவர்களின் உடமையை மோடி அரசாங்கம் அடிமாட்டு விலைக்கு தங்களுக்கு வேண்டிய தனிநபர்களிடம் தாரை வார்த்திடத் துடித்துக் கொண்டிருக்கிறது.இவற்றுக்கு எதிராக இத்துறைகளில் வேலைபார்த்திடும் தொழிலாளர்களும், ஊழியர்களும் போராட்டப்பாதையில் இறங்கி யுள்ளனர். ஜூலை மாதம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஆகஸ்டில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளார்கள். பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த ஒருமாத காலமாக தில்லி நாடாளுமன்ற வீதியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
மத்தியஅரசு ஊழியர்களும், மாநில அரசு ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.இத்தகைய சூழ்நிலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையின் பணி என்பது தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்திடவும், நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தத்திற்கு அனைத்துத்தரப்பு தொழி லாளர்களையும், ஊழியர்களையும் அணி திரட்டுவதிலும் கவனம் செலுத்துவதாகும். அதனையொட்டி, இச்சிறப்பு மாநாடு கீழ்க்கண்டஇயக்கங்களை மேற்கொண்டிட திட்டமிட்டுள்ளது:
(1) அனைத்துத்துறைகளிலும் ஒன்றுபட்ட போராட்டங்களை ஒருமுகப்படுத்தி, முன்னெடுத்துச் செல்வது.
(2) தொழிலாளர்களையும், ஊழியர்களை யும் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலும், தொழிற்பிரிவு மையங்களிலும் அணிதிரட்டுவது.
(3) தலைநகர் தில்லியில் வரும் நவம்பர் 9, 10,11 ஆகிய தேதிகளில் பெரும்திரள் தர்ணா போராட்டத்தை மேற்கொள்வது, இதில் நாடு முழுவதுமிருந்து பல லட்சக்கணக்கான ஊழியர்களைத் திரட்டுவது.
(4) மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தயாராகுமாறு அறைகூவல் விடுப்பது.மேற்கண்ட திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக வெற்றிபெற வைத்திட அனைத்துத் தொழிலாளர்களும், ஊழியர்களும் முன்வரவேண்டும் என்று இச்சிறப்பு மாநாடு அனைவரையும் சங்க வித்தியாசமின்றி கேட்டுக்கொள்கிறது.
12 அம்சக் கோரிக்கைகள்
1. பொது விநியோக முறையை அனை வருக்குமானதாக மாற்றுவதன் மூலம் விலை வாசியைக் கட்டுப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திடு.
2. வேலைவாய்ப்பைப் பெருக்கி, வேலை யில்லாத் திண்டாட்டத்தை ஒழித்திடு.
3. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராகஅமல்படுத்து. தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடு.
4. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்.
5. குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய்நிர்ணயித்து, அதனுடன் உயரும் விலைவாசிப் புள்ளிக்கு ஏற்ப ஊதியத்தையும் அதிகரித்திடு.
6. அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்.
7. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவ னங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.
8. நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்காமல் நிரந்தர ஊழியர்களையே அமர்த்திடு. தற்போ துள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தையே வழங்கிடு.
9. போனஸ், வருங்கால வைப்புநிதி முதலானவற்றின் உச்சவரம்பை நீக்கிடு, பணிக்கொடைக் கான தொகையையும் அதிகப்படுத்திடு.
10. விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களை பதிவு செய்திடு. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சி.87, சி,98 ஆகியவற்றை ஏற்றுக்கொள்.
11. தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றுவதை நிறுத்து.
12. ரயில்வே, இன்சூரன்ஸ், பாதுகாப்புத் துறையின் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காதே.இச்சிறப்பு மாநாட்டில் தமிழகத்திலிருந்து சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், வங்கி அலுவலர் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ, வங்கி ஊழியர் சங்கத் தலை வர்கள் சி.பி.கிருஷ்ணன், கே.கிருஷ்ணன், ஏஐபிஇஏ சார்பில் வெங்கடாசலம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்த எம்.எஸ்.ராஜா, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீகுமார், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீகுமார்,  நமது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் பி..அபிமன்யு முதலானோர் கலந்து கொண்டார்கள்.

Sunday, 6 August 2017

ஊதிய மாற்ற குழுவின் தற்போதைய நிலை...

அருமைத் தோழர்களே ! . . .
3வது ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்க DPE கடிதம் கொடுத்துவிட்டது. 3வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை எந்த விதமான மாற்றமும் இன்றி 19.07.17 அன்று ஏற்றுக்கொண்ட அமைச்சரவை முடிவை ஒட்டி இக்கடிதம் வெளியிடப்பட்டது. இந்தக்கடிதத்தின்படி BSNL ஊழியர்கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதி உடையவர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அமைச்சரும் அரசாங்கமும், BSNL   ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் தருவதற்கு சாதகமாக உள்ளனர் என  சங்கங்களும்,  BSNLலில் உள்ள உயர் மட்ட அதிகாரிகளும் பரப்பிவந்த வதந்திகளை இந்தக்கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள்  தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் விரைவில் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள்.
பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றம் 
01/01/2017 முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கான ஒப்புதலை 
DPE 03/08/2017 அன்று வெளியிட்டுள்ளது. நிறுவனங்களின் ஊதிய செலவினத்தைப் பொறுத்து 15 சதம் 10 சதம் 5 சதம் என ஊதிய நிர்ணயம் செய்யப்படும். தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளுக்கு இது பொருந்தாது
குறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.30000/-ஆகும்
அதிக பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.2,00,000/-ஆகும்
நமது BSNL நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதால் நமக்கு ஊதிய மாற்றத்திற்கான வாய்ப்பில்லை. ஊதிய மாற்றத்தோடு செலவினத்தை முடிச்சுப்போடும் அரசின் நியாயமற்ற செயலை எதிர்த்து நாம் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறுவழியில்லை. . .

ஆகஸ்ட்-6,ஹிரோஷிமா, நாகாஷி நினைவு தினம்...


Image result for nagasaki hiroshima bombing
ஜப்பான் நாட்டிலுள்ளஹிரோஷிமாநகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது.
அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர்சின்னப் பையன்’ (little boy) என்பதாகும்
மூன்று நாட்கள் கழித்துநாகசாகிநகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்குகுண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர்.
இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.
சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்.
இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்என்று ஆய்வறிக்கை கூறியது.
அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னது குறிப்பிடத்தக்கது..

Wednesday, 2 August 2017

தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)

ரயில்வே துறை தனியாருக்குத் தாரை வார்ப்பு -தபன்சென் கண்டனம்.

புதுதில்லி, ஆக.1-
ரயில்வேதுறையை மத்திய அரசாங்கம் படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனைக் கண்டிக்கின்றோம். இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்க்கும் செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளருமான தபன் சென் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன் சென் பேசியதாவது:
Image resultஇந்தியாவின் பிரதானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்படும் ரயில்வே துறையை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகத் தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம் எடுத்துவரும் நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திடவும், இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவரவும் விரும்புகிறேன். ரயில்வேயில் ஏற்கனவே பல பணிகள்அதாவது துப்புரவுப் பணிகள், உணவு வழங்கும் பணிகள், நிர்வாகப் பணிகள் முதலானவைஅவுட்சோர்சிங் மூலமாகத் தனியாரிடம் தரப்பட்டு விட்டனஒவ்வோராண்டும் 150 ரயில் என்ஜின்கள் (லோகோமோடிவ்ஸ்) வாங்குவதற்கான உத்தரவாதத்துடன் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடனும், பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டாம் நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தினை மத்திய அரசு செய்திருப்பதன்மூலம், இந்தியாவில் சித்தரஞ்சனிலும், வாரணாசியிலும் செயல்பட்டு வரும் ரயில் எஞ்சின் உற்பத்திப்  பிரிவுகளையும், மற்றும்பெல்நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொள்திறனையும் மூடுவதற்கு வழிசெய்து தந்திருக்கிறதுரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கும் ஆர்டர்களை அளித்திருக்கிறது. அதன்மூலம் நம் நாட்டிலுள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைகளுக்கும் மூடுவிழா காண நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கின்றன.
அடுத்ததாக, நாட்டில் உள்ள 407 ரயில் நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைத்திட இருக்கின்றனர். பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள 23 ரயில் நிலையங்கள் ஏற்கனவே இதற்காக இறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. டெண்டர்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. டெண்டரில் உள்ள நிபந்தனைகளின்படி இவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கும் ரயில் நிலையங்களில் பணியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
அடுத்ததாக, ரயில்வே வளர்ச்சி அதிகாரக்குழுமம் (ரயில்வே டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) என்னும் ஓர் அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பணி என்ன தெரியுமா? இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள ரயில்வே பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதுதான். இது முதலாவதாகும். இரண்டாவதாக, ரயில்வே பயணிகள் கட்டணங்கள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உற்பத்திச்செலவினத்தின்  அடிப்படையில் (cost basis) இனி அமைந்திடும். மானியங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். தற்சமயம் ரயில்வே கட்டணங்களில் 47 சதவீத அளவிற்கு மானியத் தொகை இருக்கிறது. எனவே அரசின் புதிய கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டால் இப்போதுள்ள கட்டணங்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். இவை மக்கள் மீதான சுமைகளாகும். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர், ‘இந்தியாவின் உற்பத்தி செய்வதற்குப்பதிலாக, இந்தியாவை முற்றிலுமாக அழித்திடும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். இது மிகவும் மோசமான தேச விரோத நடவடிக்கையாகும். இவை அனைத்தையும் தவிர்த்திட வேண்டும் என்று இந்த  அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், நாட்டு மக்கள் தங்கள் ஒற்றுமை பலத்தின் மூலமாக இந்த நாசகர நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவார்கள்.
அரசின் இந்த ஊழியர்விரோத, தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக,
ஏற்கனவே ரயில்வே ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் போராட்டப்பாதையில் அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள்.  ஆயினும் அரசாங்கம் தேசபக்த முழக்கத்தைச் சொல்லிக்கொண்டே இவ்வாறு தேச விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவை மக்களை மோசடியான முறையில் வஞ்சிக்கும் செயலாகும். அரசின் இந்த நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவைகளாகும். இவற்றை இந்த அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தபன்சென் கூறினார். தபன்சென் கோரிக்கையோடு ஜெயா பச்சன், வீரேந்திரகுமார், சி.பி.நாராயணன், து.ராஜா முதலானவர்களும் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

Tuesday, 1 August 2017

தேசபக்தி என்றால் சுர்ஜித் என்று பொருள்..ஆகஸ்ட்-1, தோழர் சுர்ஜித் நினைவு நாள்...

Image result for surjith

தொழிலதிபர் தவறவிட்ட அரைகிலோ தங்கம் காவல்துறையிடம் ஒப்படைத்த CITU ஆட்டோ தொழிலாளி...

கோவை, ஜூலை 31-
60 சரவன் தங்கத்தை தவறவிட்ட தொழிலதிபரின் நகைகளை, சாலையில் கண்டெடுத்த சிஐடியு ஆட்டோ தொழிலாளி காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ளது.  கோவை காந்திபூங்காவை அடுத்த பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் முனியப்பன். ஆட்டோ தொழிலாளியான இவருக்கு மணிமேகலை என்கிற மனைவியும், அஜித் என்ற மகனும், ஜஸ்வர்யா என்கிற மகளும் உள்ளனர். சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள ஸ்டேன்டில் வண்டியை நிறுத்தி வாடகை ஏற்றி வருகிறார். இந்நிலையில் திங்களன்று காலை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் மஞ்சப்பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்தபோது, அதில் தங்க நாணயங்கள் மற்றும் ஏராளமான நகைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.முத்துக்குமார், கிளைத் தலைவர் அமல்ராஜ் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் கோவை மாநகர காவல்துறை  ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தங்க நகைகளை ஒப்படைத்தார். முன்னதாக, கோவையில் மொத்த புத்தக வியாபாரம் செய்துவரும் தொழிலதிபர் சுவாமிநாதன் என்பவர் திங்களன்று தனது மேலாளர் பழனிச்சாமியிடம் 20 தங்கநாணயங்கள் மற்றும் நகைகள் என மொத்தம் 60 சவரன் (அரைக்கிலோ) தங்கத்தை கொடுத்து வங்கியில் நகையை அடகுவைத்து பணத்தை பெற்று வருமாறு அனுப்பியுள்ளார். இதையடுத்து பழனிச்சாமி நகைகளை மஞ்சள் பையில் சுற்றி வைத்து, தனது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கில் வைத்து வங்கிக்கு சென்ற வழியில் நகைகளை தவறவிட்டுள்ளார். வங்கிக்கு சென்ற பின்னர், வாகனத்தில் வைத்திருந்த நகைப்பை காணாமல்போனது கண்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி, தனது முதலாளியிடம் தகவலை கூறி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
இதனையடுத்து நகைகளை தொலைத்தவர்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்த காவல் ஆணையர் அமல்ராஜ், தொலைக்கப்பட்ட நகைகள் தொடர்பான அடையாளங்களை சுவாமிநாதனிடம் கேட்டுள்ளார். இதில் முனியப்பன் ஒப்படைத்த நகைகளும், இவர் சொன்ன அடையாளங்களும் ஒத்துப்போனதால் அவர்களிடம் நகை பையை ஒப்படைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முனியப்பனுக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதியை அளித்து கௌரவித்தார். இதேபோல், தொழிலதிபர் சுவாமிநாதனும், ஆட்டோ ஓட்டுநர் முனியப்பனுக்கு வெகுமதியளித்து நன்றி தெரிவித்தார்.