bsnleu

bsnleu

welcome

welcome

Thursday 27 June 2019

இந்த மாதம் சம்பளம் வருமா?!' - பி.எஸ்.என்.எல் சரிவுக்கான 4 காரணங்கள்


BSNLEU அகில இந்திய உதவி பொது செயலரும், தமிழ் மாநில தலைவருமான தோழர் S . செல்லப்பா, ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த ப்ரதியேக பேட்டியின் முழு விவரம் 


கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களுக்கு, ஜூன் மாத ஊதியத்தை வழங்க முடியாத நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

இதனால், 1.7 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ஜூன் மாத ஊதியத்துக்காக ரூ.850 கோடி செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் இயங்க முடியாத சூழலுக்குத் தள்ளப்படும் நிலையில் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொழில்நுட்ப சேவை வழங்க முடியாத சூழலில் பி.எஸ்.என்.எல் இருப்பதால், வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பைப் பெற முடியவில்லை என்கிறார்கள், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள். மற்ற நிறுவனங்கள் 4ஜி சேவை வழங்கி, 5ஜியை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமோ இதுவரை 4ஜி சேவையை வழங்கவே அனுமதிக்கவில்லை என்று வேதனையோடு குறிப்பிடுகிறார்கள் அவர்கள். 

இதுகுறித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பாவிடம் பேசினோம். 

பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிதி நெருக்கடியில் தத்தளிப்பதற்கு 4 காரணங்களை அவர் நம்மிடம் பட்டியலிட்டார். 

1. 4 ஜி சேவைக்கான அனுமதி

``இன்றைய தேதிக்கு, தொழில்நுட்பச் சந்தையில் போட்டியில் இருப்பவை பி.எஸ்.என்.எல், ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா என்ற 4 நிறுவனங்கள். மற்ற 3 நிறுவனங்களுக்கும் 4ஜி சேவையை கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக வழங்கிவருகின்றன. ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு இதுவரை 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படவே இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி போட்டி நிறுவனங்களை சமாளித்து, வருவாயைப் பெருக்க முடியும். பி.எஸ்.என்.எல் முன் நிற்கும் மிகப்பெரிய சவால் இது'' என விவரித்தவர்,

2. கடன் வாங்க அனுமதி கொடுக்காதது

``உதாரணமாக, ஜியோ நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தொழில்நுட்பச் சந்தையில் களமிறங்கியது. ஜியோ, 1.5 லட்சம் கோடி முதலீட்டுடன் தொழிலில் கால்பதித்தது. அதில், 1.25 லட்சம் கோடி ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடன். இன்றைய சூழலில், அந்த நிறுவனத்துக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் நிலுவையில் இருக்கிறது. 

வோடபோன் நிறுவனத்துக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ஏர்டெல் நிறுவனத்துக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் கடன் இருக்கிறது. அந்த 3 மூன்று நிறுவனங்களின் மொத்த கடன் மதிப்பு, ஏறக்குறைய 6 லட்சம் கோடி ரூபாய். ஆனால், பி.எஸ்.என்.எல்-லுக்கு 13,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கடன் இருக்கிறது. நாங்கள் அரசிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக வங்கிகளிடம் கடன் வாங்க அனுமதி அளியுங்கள் என்பதுதான். இதற்காக, கடன் வாங்க அனுமதிக்கும் வகையில் Letter of Comfort கடிதம் கொடுங்கள் என்று கேட்கிறோம். நஷ்டத்திலிருந்து மீள கடன் வாங்கி தொழில் நடத்த அனுமதியுங்கள் என்கிறோம். ஆனால், அரசிடமிருந்து உரிய பதிலில்லை'' என்கிறார். 
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பா

3.காலியாக உள்ள நிலங்களை வருமானத்துக்குப் பயன்படுத்த அனுமதிக்காதது

இதுகுறித்து அவர் கூறுகையில்,``பி.எஸ்.என்.எல்-லுக்கு சொந்தமாக 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. அதில், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் காலியாக இருக்கின்றன. இவற்றிலிருந்து வருவாய் பெறக்கூடிய வகையில், அந்த நிலங்களை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடுவது ஆகியவற்றுக்கும் அரசின் அனுமதிகோரி காத்திருக்கிறோம். இதன்மூலம், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிட்ட வாய்ப்புள்ளது. இதற்கு அனுமதி கோரி, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அந்தக் கடிதத்துக்கு தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் வந்த பதிலில், `அந்த நிலங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குக் கடந்த 2000-ம் ஆண்டிலேயே மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குச் சொந்தமாக நிலமே இல்லை' என்று பதில் கிடைத்தது. தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது. ஆனால், சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என்பதே நிதர்சனம்'' என்றார்.  

   
4. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை

``2016-ம் ஆண்டு செப்டம்பரில், ஜியோ, 3 மாதங்களுக்கு சேவை அனைத்தும் இலவசம் என்ற அறிவிப்போடு சந்தையில் நுழைந்தது. அரசு விதிமுறைகளின்படி இலவச சேவைகளை 3 மாதங்களுக்கு மேல் வழங்கக் கூடாது. ஆனால் ஜியோ, தனது இலவச சேவையை 3 மாதங்களுக்குப் பின்னர், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்தது. இது அப்பட்டமான விதிமீறல் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் அன்றைய செயலாளர் தீபக் மிஸ்ரா, டிராய் அமைப்புக்குக் கடிதம் மூலம் எச்சரித்தார். இலவச சேவை வழங்குவதால் அரசுக்கும் இழப்பு ஏற்படும். ஏனென்றால், அவர்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு அளிக்க வேண்டும். இலவச சேவையை நீட்டித்தால், அரசுக்கும் இழப்புதான். இந்தத் தகவல்களை சுட்டிக்காட்டி, தீபக் மிஸ்ரா எழுதிய கடிதம் திரும்ப வந்தது. அவருக்குப் பணி மாறுதல் அளிக்கப்பட்டு, அந்தப் பதவியில் வேறு ஒருவர் அமர்த்தப்பட்டார். பின்னர், ஜியோவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. 

இந்த நஷ்டத்திலிருந்து மீள, பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடன் வாங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். 11,700 கோடி ரூபாய் அளவுக்கு  கடன் இருக்கிறது. நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் சூழலில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் அளிக்க முடியாமல் தவித்துவருகிறோம். குறைந்தபட்சம் 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரைதான் அவர்களின் மாத ஊதியம். மின்கட்டணம்கூட கட்டமுடியாத சூழ்நிலைதான் தற்போது இருக்கிறது. தமிழகத்தில் ரூ.30 கோடி அளவுக்கு மின்கட்டணம் பாக்கி இருக்கிறது. இதற்காக, 550 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் டவர் அல்லது அதனுடன் தொடர்புடைய மின் இணைப்புகள். இப்படி 550 டவர்கள் செயலிழந்துபோகும் பட்சத்தில், எப்படி மக்களுக்கு சேவை வழங்க இயலும்?. வாடிக்கையாளர்கள் எப்படி பி.எஸ்.என்.எல்-ஐ நம்புவார்கள். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நடவடிக்கைதான் இது. அரசு அனுமதிக்கும்பட்சத்தில், இதிலிருந்து மீள இயலும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்'' என்றார் நம்பிக்கையுடன். 

பி.எஸ்.என்.எல்-லின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா?

CLICK HERE FOR LINK

No comments:

Post a Comment