சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தமிழ் நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் மேலாண்மை பொன்னுசாமி 30.10.2017 அன்று காலை சென்னை ராஜாஜி மருத்துவமனையில் காலமானார். 1951ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைகாடு என்ற கிராமத்தில் பிறந்த தோழர் பொன்னுசாமி 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இவர் தனது கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இதுவரை 22 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல்கள், ஒரு கட்டுரை தொகுப்பு உள்ளிட்ட 36 நூல்களை எழுதியுள்ளார். கிராமத்து மக்களின், விவசாயிகளின் உணர்வுகளை எழுத்துக்களாக பிரதிபலிக்கும் அற்புதமான எழுத்தாற்றல் மிக்கவர் தோழர் மேலாண்மை பொன்னுசாமி. 2007ஆம் ஆண்டு இவர் எழுதிய ”மின்சார பூ” என்கிற சிறுகதை தொகுப்பிற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமியின் விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினை துவக்குவதில் பெரும்பங்காற்றியவர். அதன் நிர்வாகியாக இருந்து அந்த அமைப்பை வழிநடத்தி வந்தார்.
சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர் மேலாண்மை பொன்னுசாமிக்கு பொன்னுத்தாயி என்கிற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் நமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் மேலாண்மை பொன்னுசாமியின் மறைவிற்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment